அரை மணி நேரத்தில் 2070 காகிதப் பைகள்- உலக சாதனை


              கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி தொடங்கி 14 ஆண்டுகள் முடிவடைந்தது. இதையொட்டி, புவி வெப்பமயமாதலை தடுக்கவும், பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இக்கல்லூரியை சேர்ந்த 284 மாணவ, மாணவிகள், 16 ஆசிரியர்கள் உள்பட 300 பேர் சேர்ந்து, கல்லூரி வளாகத்தில், காகித பைகளை தயார் செய்தனர். அரை மணி நேரத்தில் 2070 காகிதப் பைகளை உருவாக்கப்பட்டன.  இந்த  நிகழ்ச்சியை ஆய்வு செய்த லண்டன், எலைட் உலக சாதனை நிறுவன ஆய்வாளர் சிரோன்லால் புதிய எலைட் உலக சாதனையாக அறிவித்தார். 2007ம் ஆண்டு ஜனவரியில் லண்டனில் 257 பேரை கொண்டு 1351 பைகளை 30 நிமிடங்களில் உருவாக்கியதே முந்தைய உலக சாதனை.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை


கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
9ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி, பள்ளிக்கு செல்ல வசதியாக ராமநாதபுரத்திலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். அங்கு, கடந்த ஓராண்டாக அந்த மாணவியின் 59 வயதான உறவினரும் , அவருடைய நண்பரான கருப்பசாமியும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர்களுடைய 70வயது நண்பரான, ஓய்வுபெற்ற மருத்துவ உதவியாளர் பாலுவிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவருடன், ராகம் கருப்பசாமி ஆகியோர் சிறுமிக்கு தொடர்ந்து வன்கொடுமை இழைத்துள்ளனர்.
அதனால், பாதிப்படைந்த சிறுமி நேற்று கோவை மாநகராட்சி காவல் துறை ஆணையரிடம் புகாரளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் காவலர்கள் சம்பந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிறுமியை மிரட்டியும், மயக்க மருந்து அளித்தும் அவர்கள் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமிக்கு கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  மாணவியை வன்கொடுமை செய்தவர்களில் 4 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என கூறப்படுகிறது. ஒருவர் சிறார் என கூறப்படுவதால், அவரின் வயதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
                                                                                   -தேனி முருகேஸ்ன். 

கோவை மாவட்டத்தில் மனிதர்களுக்கும், யானைகளுக்குமான மோதல்



                                கோவை      மாவட்டத்தில்      மனிதர்களுக்கும்,   யானைகளுக்குமான மோதல் விபரீத கட்டத்தை எட்டி வருகிறது. நடுத்தர வயதுடைய ஒரு யானை உயிர்வாழ ஒரு நாளைக்கு சுமார் 250 கிலோ உணவும், 150 லிட்டர் தண்ணீரும் அவசியம். ஒரே இடத்தில் இவை தொடர்ந்து கிடைப்பது சாத்தியம் இல்லை என்பதாலேயே யானைகள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கின்றன. மேட்டுப்பாளையம் பகுதி கர்நாடக மற்றும் கேரள வனப்பகுதியை இணைக்கும் பகுதியாக மட்டுமல்லாமல், யானையின் வலசைப் பாதையாகவும் திகழ்கிறது. இந்த வலசைப் பாதைகளில் மனிதர்கள் குறுக்கிடுவதாலேயே யானைகளால் மனிதர்கள் தாக்கப்படுவதாக குறிப்பிடுகின்றனர் வன அலுவலர்கள்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படல் வேண்டும்: இந்தியாவில் உள்ள 88 யானை வழித்தடங்களில், 10 வழித்தடங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளதாகக் கூறுகின்றன இந்திய வன உயிரின அறக்கட்டளையின் ஆய்வு முடிவுகள். உணவு மற்றும் நீர் தேடி ஒரே பாதையில் பயணிக்கும் யானைகளின் வழித்தடங்களை தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் அரசு நிறுவனங்களும் ஆக்கிரமித்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர் வன ஆர்வலர்கள்.
கூடுதல் நடவடிக்கைகள்: அகழிகள் அமைப்பது, சோலார் மின் வேலிகள் அமைப்பது என அரசு பலவித பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் , யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க இயலாததால் தற்போது ''மாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்'' என தண்டோரா அடித்து வருகின்றனர் கிராம மக்கள். அதே சூழலில் யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க அரசு மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகக் கூறுகின்றனர் வன அலுவலர்கள்.
இயற்கை பாதுகாப்பே நிரந்தர தீர்வு: வனவிலங்குகளின் இயற்கையான நடமாட்டத்திற்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, யானைகளின் வலசைப் பாதைகளை பாதுகாப்பது மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்பதே வன ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

                                           -பசுமை நாயகன்


கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் மான் வேட்டை


             கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட 9 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
          தட்டப்பள்ளம் என்னும் காட்டுப்பகுதியில், இன்று காலை வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
         அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால் அப்பகுதியை நோக்கி வனத்துறையினர் விரைந்து சென்றனர். அங்கு, ஒரு மானைக் சுட்டுக் கொன்ற 9 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கியும், ஏழு இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

                                                                            -பசுமை நாயகன்


பாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை


   சாலையோரக் கடைகளில் உணவுப் பொருட்கள் போதிய சுகாதாரப் பாதுகாப்புடன் தயாரிக்கப்படுவதில்லை என்பது பரவலாக கூறப்படும் குற்றச்சாட்டு. இத்தகைய சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதால் 250 க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் கிருமிகளால் இத்தகைய நோய்கள் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமையல் செய்யும் முன்னர் கைகளைக் கழுவத் தவறுவது, கைகளைக் கழுவாமல் உணவு உட்கொள்வது, முறையாகச் சமைக்கப்படாத உணவுகள், முறையாகப் பதப்படுத்தாத பால் மற்றும் தண்ணீர் போன்ற காரணங்களால் இத்தகைய நோய்கள் ஏற்படுகின்றன என்பது மருத்துவர்களின் கருத்து.
கிருமிகள் உடலுக்குள் புகுந்து, சில மணி நேரங்கள் முதல், சில நாட்கள்வரை கடந்த பின்னர்தான் நோய்க்கான அறிகுறி தென்படத் தொடங்குகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், உள்ளே செல்லும் நுண்கிருமிகள் உணவுக்குழாய்ச் சுவர்களில் தங்கி, பல்கிப் பெருகுகத் தொடங்குகின்றன. இவற்றில் சில கிருமிகள் ரத்த ஓட்டத்தில் கலந்து விடும். மற்ற சில கிருமிகளில் இருந்து வெளியேறும் விஷமானது குடலில் தங்கியிருக்கும் உணவில் கலந்து அதனை நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றி விடும். வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் மூலம் நோய்த் தொற்று இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர்வறட்சி ஏற்படும். இதற்கு கால் லிட்டர் தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் அரை டேபிள் ஸ்பூன் உப்பு ஆகியவற்றைக் கலந்து குடிக்கத் தருவதன் மூலம் குணப்படுத்தலாம் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
சமைக்கு முன்னரும், உணவு உட்கொள்ளும் முன்னரும் கைகளைக் கழுவுவதன் மூலம் சுகாதாரக் கேட்டினால் ஏற்படும் பெரும்பான்மையான நோய்களைத் தடுக்க முடியும்.

தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும்கூட உணவுப் பாதுகாப்பு என்பது பல்வேறு தளங்களில் உறுதி செய்யப்படவேண்டியது அவசியமானதாகும்.
ஆரோக்கியமான உணவு, தூய்மையான சுற்றுப்புறம், பராமரிப்பு முதல் பறிமாறுதல் வரை சுகாதாரம் இதுதான் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள். இந்த சட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக கூறும் உணவக உரிமையாளர்கள், பல்வேறு நோய்களை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுப்புறச் சுகாதார கேட்டிற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்புகின்றனர்.
உணவு சமைக்க பயன்படுத்தப்படும் குடிநீரில் கூட குறிப்பிட்ட அளவிற்கு மேல் குளோரின் இருப்பதற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்புவதோடு அதில் சில திருத்தங்கள் செய்து நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என ஓட்டல் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவு பாதுகாப்பு என்பது உடல் நலன் மற்றும் உயிர் சார்ந்த விஷயமாக உள்ளதால் அதற்கான சட்ட சரத்துக்களை பின்பற்ற வேண்டியது சிறு, குறு மற்றும் பெரும் உணவகங்களின் கடமை. அதேபோல, அவர்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது அரசு அதிகாரிகளின் கடமை. எனினும், பொதுவான சூற்றுச்சூழலையும், சுகாதாரத்தையும் பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமை என்கின்றனர் சுகாதார வல்லுனர்கள்.

வீட்டில் நாம் உண்ணும் உணவாக இருந்தாலும் சரி, உணவகங்களில் உண்ணும் உணவாக இருந்தாலும் சரி, அது நோயை உருவாக்காத அளவுக்கு சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தேசிய பிரச்சாரம் தமிழகத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.
நாம் வீட்டிலோ, உணவகங்களிலோ உட்கொள்ளும் உணவு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக 2006 ஆம் ஆண்டில் பாதுகாப்பான உணவுக்கான சட்டம் இயற்றப்பட்டது.
விளைநிலத்திலிருந்து நம் கைக்கு உணவு வரும் வரைக்கும் பல்வேறு நிலைகளில் அதனை உறுதி செய்வதற்கான அமைப்புகளும் மத்திய, மாநில அளவில் இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன. நாம் வாங்கும் உணவுப் பொருள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை மளிகைக் கடைகளிலும் உணவகங்களிலும் நாமே கேட்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும். தேசிய அளவிலான பிரச்சாரம் தமிழகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் வியாழக்கிழமையன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தப் பிரச்சாரம் தமிழகத்தின் சென்னையிலும் வேறு நான்கு மாவட்டங்களிலும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இது பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுத்தமான உணவைத் தயார் செய்வதும் அதனை நியாயமான விலையில் வழங்குவதும் சாத்தியம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தரக்குறைவான உணவுப் பொருள்களைப் பயன்படுத்துவதும் உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதும் பெரும் சவால்களாக உள்ளன. இதனைக் கேள்விக்கு உட்படுத்துவதுதான் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் மே மாதம் வரை ஊர்தி மூலமாகவும் விளம்பர சுவரொட்டிகள், பல்வகை ஊடகங்கள் மூலமும் இந்தப் பிரச்சாரம் நடைபெற உள்ளது. நடிகர்கள் ரேவதி, நாசர், சரண்யா ஆகிய்யோர் இதற்கான குறும்படங்களில் நடித்துள்ளனர். இதற்கான பயிற்சி பெற்ற 60 மாணவ தூதுவர்கள் தயாராகியுள்ளனர்.

பாதுகாப்பான உணவை உறுதி செய்ய நுகர்வோர் தரப்பிலும் விழிப்புணர்வு அவசியம். உணவுக் கலப்படத்தை எதிர்த்து நடவடிக்கை எடுக்க அனைத்து நுகர்வோருக்கும் அதிகாரம் அளித்திருக்கிறது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம். உணவுப் பொருள்கள் வாங்கும் அனைவருக்கும் அவற்றைச் சோதித்துக் கொள்ளும் உரிமை உண்டு.
தமிழ்நாட்டில் சென்னை கிங் ஆய்வு நிலையம், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களிலுள்ள உணவுப் பகுப்பாய்வாளர்கள் ஆகியோரிடம் கட்டணம் செலுத்தி உணவைப் பகுப்பாய்வு செய்து கொள்ளலாம்.
உணவு பாதுகாப்பில்லாதது என்று உறுதி செய்யப்பட்டால், ஆய்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும். உணவுப் பொருளின் லேபிள்களில் தயாரிப்பு தேதி, பயன்படுத்துவதற்கு உகந்த காலகட்டம், உள்ளிருக்கும் பொருள்கள் பற்றிய விவரம், அதிகபட்ச விலை, மொத்த எடை, ஊட்டச்சத்து விவரம், உணவுத் தயாரிப்பாளரின் முகவரி ஆகியவை சரிவர இடம்பெறவில்லையெனில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து 500 ரூபாய் பரிசு பெறலாம்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006ன் படி பாதுகாப்பற்ற உணவை விற்றால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் ஆறு மாத கால கடுங்காவல் தண்டனையும் வழங்கலாம்.
பாதுகாப்பற்ற உணவினால் இறப்பு நிகழ்ந்தால் பத்து லட்சம் ரூபாய்க்கு குறையாத அபராதம், ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ஆயுட்கால சிறை வழங்கப்பட இந்தச் சட்டத்தில் இடம் இருக்கிறது. தரக் குறைவான உணவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் உணவு பற்றிய திசைதிருப்பும் விளம்பரத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது.
பாதுகாப்பற்ற உணவை உற்பத்தி செய்பவரே தண்டனைக்கு இலக்காவார் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006 கூறுகிறது. காலாவதியான தேதிக்கு பிறகு உணவுப்பொருளை விற்பனை செய்தால் மொத்த விற்பனையாளர், வினியோகஸ்தர் தண்டனைக்கு ஆளாவார். சுகாதாரமற்ற சூழலில் உணவுப் பொருளை வைத்திருந்தாலும் மொத்த விற்பனையாளர், வினியோகஸ்தர் தண்டனைக்குரியவராவா
                                      -பசுமை நாயகன்

யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு:விதிமுறை மீறிய ஈஷா?


        கோயமுத்தூர் மாவட்டத்தில் மனிதர்களுக்கும் காட்டு யானைகளுக்கும் இடையேயான மோதல்கள் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டேவருகின்றன. இது குறித்து புதிய தலைமுறை நடத்திய புலனாய்வில் அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.
    கோவை மாவட்டத்தில், கடந்த ஆண்டும் மட்டும் 800 முறை யானைகள் காட்டைவிட்டு வெளியே வந்திருக்கின்றன. 20 பேர் யானை தாக்கி இறந்திருக்கிறார்கள். 17 யானைகள் மின்சார வேலிகள், ரயில் பாதைகள் ஆகிவற்றில் சிக்கி பலியாகியிருக்கின்றன. இந்த மோதல்கள் அனைவராலும் பேசப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், பல தனியார் அமைப்புகள் போதிய அனுமதியின்றி பெரிய அளவில் கட்டடங்களை வனப்பகுதியை ஒட்டி கட்டியுள்ளது இந்த மோதல்களுக்கு முக்கிய காரணம் என்று வனத்துறை தெரிவிக்கிறது.
இக்கரை போளுவாம்பட்டி காப்புக்காடுகளை ஓட்டி அமைந்திருக்கும் ஈஷா யோகா மையம் மனநல மேம்பாடு குறித்த சேவையை கடந்த 30 ஆண்டுகளாக செய்துவருகிறது. உலகம் முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான யோகா விரும்பிகளை ஈர்க்கும் இந்த மையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கிறார்கள். 113 ஏக்கரில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் புலங்கள் சாடிவயல்- தாணிக்கண்டி யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளது என்கிறது வனத்துறையின் ஆவணங்கள். இதன் காரணமாகவே யானைகள் அடிக்கடி காட்டைவிட்டு வெளியே வந்து விளை நிலங்களை சேதப்படுத்திவருகிறது என்கிறது வனத்துறையின் அறிக்கை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டி, போதிய துறைகளின் அனுமதியின்றி, கட்டுமானங்களை நிறுவியுள்ளது உலகப்புகழ் பெற்ற ஈஷா யோகா மையம் என அரசு ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், அப்பகுதியில் அதிகரித்துவரும் யானை-மனித மோதலுக்கு ஈஷா மட்டும் காரணமல்ல, போதிய அனுமதியும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் இண்டஸ் பொறியியல் கல்லூரி, தாமரா விடுதி, சின்மையா சர்வதேச உறைவிட பள்ளி உள்ளிட்ட 15 அமைப்புகளும் காரணம். இப்போது ஈஷா யோகா மையத்தின் விதிமுறை மீறல்களை முதலில் பார்ப்போம்.
ஈஷா யோகா மையம் அமைந்திருக்கும் இடம் மலையிடப் பாதுகாப்பு குழுவின் கீழ் வரும் பகுதி. இந்த வன எல்லையை ஒட்டி கட்டடங்கள் கட்ட தொடங்குவதற்கு முன்பாகவே மலையிடப் பாதுகாப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும். 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு, சுமார் 69 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டடங்களை ஈஷா யோகா மையம் இதுவரை வனத்துறை, நகர் ஊரமைப்புதுறை ஆகிய துறைகளிடம் தடையில்லா சான்று பெறவில்லை. இது குறித்து ஈஷா யோகா மையத்தினர் கொடுத்த விளக்கத்தில், கட்டிடங்களுக்கு போளுவாம்பட்டி ஊராட்சியிடம் உரிய அனுமதி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பத்தாயிரம் சதுர அடிக்குமட்டும்தான் ஊராட்சி அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கும் ஊராட்சி தலைவர் சதானந்தம், யானைகள் தொல்லை அதிகரித்துவருவதாக கவலை தெரிவிக்கிறார்.
ஈஷாவின் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதால், யானைகள் காடுகளைவிட்டு வெளியே வருதாக வனத்துறை ஆவணம் தெரிவிக்கிறது. இதை அதே பகுதியைச் சேர்ந்த நரசீபுரம் ஊராட்சி தலைவர் முரளியும் உறுதிப்படுத்துகிறார்.
இது குறித்து ஈஷா யோகா மையத்தினர் கொடுத்த விளக்கத்தில் தங்களது நடவடிக்கைகளால் வனத்திற்கும், யானைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அமைப்புகளை மதிக்காத ஈஷா? ஈஷா அமைப்பு கட்டியுள்ள 60 கட்டடங்களும், கட்டிவரும் 34 கட்டுமான பணிகளுக்கும் உரிய அனுமதியளிக்க கோரி நகர் ஊரமைப்புதுறைக்கு கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி விண்ணப்பித்திருக்கிறது. அனைத்து கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி நகர் ஊரமைப்புதுறை உத்தரவிட்டது. ஆனால் அதை ஈஷா யோகா மையம் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. நகர் ஊரமைப்புதுறை நிறுத்த கடிதத்திற்கு பிறகு சூர்ய குண்டம் என்ற கட்டுமானத்தை நிறுவி அதை டிசம்பர் 22 ஆம் தேதி செயல்பாட்டிற்கு திறந்திருக்கிறது ஈஷா யோகா மையம். இது குறித்து கேட்டதற்கு நகர் ஊரமைப்புதுறையின் கடிதத்தை மதித்து கட்டுமானப்பணிகளை நிறுத்திவிட்டதாக ஈஷா யோகா மையம் விளக்கமளிக்கிறது. இன்னும் கட்டுமானப்பணிகளை தொடர்வதால், அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை அகற்றப்போவதாக டிசம்பர் 24ஆம் தேதி இறுதி கடிதம் ஒன்றை ஈஷாவிற்கு, நகர் ஊரமைப்புத்துறை அனுப்பியிருக்கிறது.
இண்டஸ் கல்லூரியின் விதிமீறல்கள்: இதேபோல், கோவை சிறுவாணி சாலை ஆலந்துறை காப்புக்காட்டை ஒட்டி அமைந்துள்ளது இண்டஸ் பொறியியல் கல்லூரியின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இண்டஸின் சுற்றுச்சுவர், முன்பக்க நுழைவு வாயில் ஆகியவை வன எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது.
வனப்பகுதியை ஒட்டி 150 மீட்டர் buffer zone ஏன் விட வேண்டும் என்ற கேள்வி எழலாம். யானைகள் உயரமாக இருக்கும் பாறைகள் மீது ஏறுவதில்லை. வலசைக்கு சமதளம் தேவைப்படுகிறது. நீங்கள் பார்க்கும் இந்த பகுதியைப் போல் ஆக்கிரமிப்புகள் தொடரும் வரையில் யானை-மனித மோதல்கள் ஓயப்போவதில்லை.

ஆயிரக்கணக்கான சதுர அடிகளில் கட்டடங்களை கட்டியிருக்கும் இண்டஸ் கல்லூரி நிர்வாகம் இதுவரை முக்கியமான துறைகளான வனத்துறை, நகர் ஊரமைப்புதுறை ஆகிய துறைகளிடம் தடையில்லா சான்று பெறவில்லை என்று அரசு துறைகளின் ஆவணங்கள் உறுதியாகச் சொல்கின்றன. இந்த கட்டடங்களை இடிக்கச்சொல்லி ஒரு நோட்டிசை அனுப்பிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருகிறது ஆலந்துறை பேரூராட்சி.
விதிகளுக்கு புறம்பாக தாமிரா ரிசார்ட்ஸ்?
கோவையின் பிரபலமான பிரிக்கால் நிறுவனத்தினரால் நடத்தப்பட்டுவரும் தாமரா விடுதியின் மீதும் குற்றச்சாட்டுகள் பாய்கின்றன. பேரூராட்சி, நகர் ஊரமைப்புதுறை, வனத்துறை, என எந்த துறையிடமும் அனுமதி பெறாமல் தாமிரா விடுதி கட்டப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, செய்தி தொடர்பாளரை தொடர்பு கொண்ட பொது சம்பந்த துறைகளிடம் அனுமதிக்கு விண்ணபித்திருக்கிறோம் என்றார்.

உயரமான சுற்றுச்சுவர் அமைக்கலாமா?:மத்துவராயபுரம் நெல்லூர் வயலில் அமைந்திருக்கும், சின்மையா சர்வதேச உரைவிடப் பள்ளி மீதும் இதே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விதிகளை புறக்கணித்துவிட்டு, சமீபத்தில் வன எல்லையை ஒட்டியே சின்மையா நிறுவனம் உயரமான சுற்றுச்சுவரை எழுப்பியிருக்கிறது. அதேபோல் அனுமதியின்றி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான சதுர அடிகளில் கட்டடங்களை கட்டியிருக்கிறது இந்த நிறுவனம். இந்த விதிமுறை மீறல்கள் குறித்து விளக்கம் கேட்டதற்கு பதில் இல்லை.
விதிகளை மீறிய அமிர்தானந்தாமயி?மலையிடப் பாதுகாப்பு குழுவிடம் அனுமதி பெற்றுள்ள மாதா அமிர்தானந்தாமயி கல்வி நிறுவனமும் விதிகளை கடைபிடிக்கவில்லை. வனத்துறை தடையில்லாச் சான்று வழங்கும் பொது வன எல்லையிலிருந்து 150 மீட்டர் நீளத்திற்கு எவ்வித கட்டடிடமும், வேலியும் அமைக்க கூடாது என்ற நிபந்தனை விதித்திருந்தது. ஆனால், வன எல்லையை ஒட்டியே அமிர்தாமயி நிறுவனம் மின்வேலி அமைத்திருக்கிறது. அதேபோல், அந்தப்பகுதியில் நீர் நிலைகளையும் காக்க தவறி இருக்கிறது. இது குறித்து அமிர்தனந்தாமயி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை.
யானைகளை விரட்டும் ஆபத்தான பணி:காட்டிலிருந்து வெளியே வரும் யானைகளை விரட்டும் பணி மிகவும் ஆபத்தானது. கோவைப்பகுதியில் தினமும் காட்டைவிட்டு வெளியே வந்த யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்ட யானைகள் பாதுகாப்பு படையினருடன் புதிய தலைமுறை செய்திக்குழுவினர் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை இப்போது பார்க்கலாம். கோவை வனப்பகுதியில் தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளால் ஆயிரக்கணக்கான யானைகள் காட்டைவிட்டு வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்துவருகிறன. 20 யானைகள் காட்டைவிட்டு வெளி வந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தற்போது தகவல் வந்திருக்கிறது.
கோவையில் தனியார் ஆக்கிரமிப்புகளை பார்த்து கோபப்படும் யானைகள் குடியிருப்புகள் புகுந்து தாக்குதல் நடத்துகின்றன. அப்படி 8 யானைகள் வனத்தை விட்டு வெளியே வந்திருக்கின்றன. அவைகளை வனத்துறையினர் பட்டாசு விட்டு விரட்டுவதை நேரடியாக பார்க்கலாம். வனத்துறையிருக்கு வருடத்தின் அனைத்து நாட்களும் தூங்கத இரவுகளாக இருக்கின்றன. தனியார் ஆக்கிரமிப்புகளால் யானைகள் வெளிவருகின்றன.
இதனால் மனித விலங்கு மோதல் அதிகரித்துவருகிறது. இந்த பிரச்சனைக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் வனத்துறையினர்.
பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகளை ஒட்டி தனியார் கட்டடங்கள் அமைவதை தடுக்க வேண்டிய அரசு அமைப்புக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன. கட்டடங்களால், வனப்பகுதியின் தன்மை, சுற்றுச்சூழலை பாதிக்க கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அரசு அமைப்புகளுக்கு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டியது யார்? :பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் கட்டங்களைக் கட்டினால் அவற்றை தடுக்க வேண்டியது யார் என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, மாவட்ட நிர்வாகம், வனத்துறை, சுற்றுசூழல்துறை, நகர் ஊரமைப்புத்துறை இப்படி பல அமைப்புகள் இருந்தாலும், அனுமதியில்லாத கட்டடங்களை முறைப்படுத்த எந்த அமைப்பும் தயாராக இல்லை என்கிறார் இந்த முறைகேடுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவணங்களை சேகரித்த பொதுநல ஆர்வலர் சிவா.
மலைதள பாதுகாப்புக்குழு என்ன செய்கிறது?:2003 ஆம் ஆண்டு தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட மலை தாலுக்காக்களில் கட்டடப்பணிகள் தொடங்க மலைதள பாதுகாப்புக்குழு அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் இந்த குழு கட்டிடங்களுக்கு அனுமதியளிக்கும் வேலையைமட்டும் செய்கிறது. சுற்றுச்சூழல் குறித்த பார்வை இதற்கு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
மாவட்ட ஆட்சியருக்கு என்ன பொறுப்பு?: மலைதள பாதுகாப்புக்குழு கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளில் அனுமதியில்லாத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கும் இருக்கிறது. ஆனால், விதிகளுக்கு புறம்பாக கோவை மாவட்டத்தில் எழும்பியிருக்கும் கட்டடங்கள் குறித்து தமக்கு தெரியவரவில்லை என்கிறார் கோவை மாவட்ட ஆட்சியர்.
வனப்பகுதிகள் பாதுகாக்கப்படும்: இது குறித்து மலைதளக்குழுவின் தலைவரும், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலரிடம் கேட்டபோது, நகர் ஊரமைப்புத்துறை சட்டத்திற்கு புறம்பான கட்டடங்களை கண்காணித்து அகற்றிவருவதாக தெரிவித்தார். வனப்பகுதிகளைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றும் அந்த துறை தெரிவித்திருக்கிறது.
சட்டத்திற்கு புறம்பான கட்டடங்களை அகற்ற உரிய நேரத்தில் அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வனத்தை பாதுகாக்க முடியும். மனித-விலங்கு மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
                                            .-பசுமை நாயகன்